தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. பல முக்கிய அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் வெளுத்து வாங்கி வருகிறது.

இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. தமிழக-கேரள எல்லையை ஓட்டிய பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஓட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால் 
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையும் தெரிவித்துள்ளது. வருகிற 20 மற்றும் 21 ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருவதை பொறுத்து மழையின் அளவு தெரிய வரும் என வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.