தமிழகத்தில் நாளை ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆயத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்மணி அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றியும், இந்த விஷயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, மக்கள் தங்களை தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே நாளை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து, மார்ச் 22-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட், மளிகை கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவையும் நாளை இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், வாடகை காரும் இயங்காது என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசு துறை மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், நாளை ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாளைய சுய ஊரடங்கு உத்தரவையடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.