தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவு பெற்றது. தகுதி பெற்ற வேட்பாளர்கள் கடந்த ஒருவார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை 5 மணியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைந்தது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. காலை 8 மணியளவில் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்க இருக்கிறது. பொதுமக்கள் வாக்களிக்கும் விதமாக வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இரண்டு நாட்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுபான கடைகள் அடைக்கவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் வெளியாட்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

இதனிடையே உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 48,579 போலீசாரும், காவல்துறை நண்பன் திட்டத்தில் 16,500 பேரும் என மொத்தமாக 63 ஆயிரத்து 79 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரையில் இவர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.