Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவிலும் அசத்தும் முதல்வர் எடப்பாடி... தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் சேலத்தில் திறப்பு..!

சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Tamil Nadu's longest double bridge in Salem opens
Author
Salem, First Published Jun 11, 2020, 12:06 PM IST

சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 5 ரோட்டை மையமாக கொண்டு புதிதாக ஈரடுக்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலும், குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பேருந்து நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரையிலும் ரூ.441 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

Tamil Nadu's longest double bridge in Salem opens

இந்த மேம்பாலம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், முதல்கட்டமாக ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் சாரதா கல்லூரி சாலையில் ராமகிருஷ்ணா ரோடு சந்திப்பு வரையிலான 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட மேம்பாலத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரையில் 5 கிலோ மீட்டர் தூரம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன. இந்த மேம்பாலமானது 4 வழிப்பாலமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. குரங்குச்சாவடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர், சேலம் லீபஜார் முதல் செவ்வாய்பேட்டை இடையே ரூ.46.35 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் திறந்து வைத்தார். ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயரும், ரயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டப்பட்டது.

Tamil Nadu's longest double bridge in Salem opens

இந்த உயர்மட்ட பாலங்கள் திறப்பு விழாவில் மாவட்ட  ஆட்சியர் ராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சேலத்தில் தான் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios