சேலத்தில் மகன் இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டத்தைச் சேர்ந்தவர், பெருமாள் மனைவி ராஜம்மாள் (75). இவரது மகன் முருகேசன் (50). இவர்கள், வெள்ளாளகுண்டத்தில், 'சாலைக்கடை' பெயரில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஓட்டல் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இந்த ஓட்டல் பிரபலமானதால், அங்கு, 'சாலைக்கடை பேருந்து நிலையம் உருவாகனது. 

பெருமாள் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், முருகேசன், ராஜம்மாள், ஓட்டல் தொழிலை கவனித்து வந்தனர். சில நேரங்களில், இல்லாதவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கியதால், இவர்கள் மக்களால் பெரிதும் பாராட்டை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு தூங்க சென்றார். அப்போது, அதிகாலை முருகேசனுக்கு திடீரென நெஞ்சுவலியால் துடித்துள்ளார்.

 

இதனை, கண்ட உறவினர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர் முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இந்த அதிர்ச்சி செய்தியை அறிந்த ராஜம்மாள் அடுத்த 10வது நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே நேரத்தில் தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.