இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தற்போது 12 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது நான்காம் கட்டத்தை எட்டி இருக்கிறது. எனினும் சில தளர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மார்ச் 16-ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கின்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

பள்ளிகள் திறப்பு குறித்தும் சமூக விலகலை கடைபிடித்து வகுப்புகள் நடத்துவது தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் ஜார்ஜ் தாமஸ் வைத்தியம் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை அரசு நியமித்தது. அக்குழுவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர். இதனிடையே ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், உயர்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அரசுக்கு பரிந்துரை வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வி ஆணையருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:  ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து கற்றல், கற்பித்தல் பணிகளை தொடர அனுமதிக்கவேண்டும். நோய்த்தொற்று குறையாமல் இருந்தால், எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஒருநாளும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒருநாளும் நடத்த அனுமதிக்கவேண்டும்.

ஒருநாள் இடைவெளி இந்த 2 தொகுதி மாணவர்களுக்கும் கிடைக்கும், அந்த நாட்களில் வீட்டு பாடங்களும், ஆன்லைனில் வகுப்புகளும் நடத்தலாம். அதிகம் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஒருமாதம் தள்ளிக்கூட பள்ளிகள் திறக்க அனுமதிக்கலாம். மாவட்ட கலெக்டரின் தலைமையில் அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, மாநிலத்தில் உள்ள நிலைமையையும் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தலில் பாதிக்காத வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு நிபுணர் குழு தெரிவிக்கும். அதன்பிறகு இறுதி முடிவெடுத்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது.