அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் கைவரிசை காட்டிய சேலம் மைத்திலி அதிரடி கைது
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் சிவசேகர் என்பவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 19 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சேலம் மைதிலியை கைது செய்து பாப்பாரப்பட்டி காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சிவசேகர் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி இருவருமே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவம் நடந்த அன்று இருவருமே அவரவர் பணி்க்கு சென்றிருந்த நேரத்தில் சிவசேகரின் வயதான தாயார் பெருமா மட்டும் தனியாக இருந்துள்ளார். கார் ஒன்றில் வந்த பெண் ஒருவர் சிவசேகரின் வீட்டிற்கு சென்று, உறவினரை போல தந்திரமாக பேசி ஆப்பிள் பழத்தை மூதாட்டிக்கு சாப்பிட கொடுத்து பீரோவில் இருந்த தங்க நகைகளை பட்ட பகலிலேயே சர்வ சாதாரணமாக அள்ளிச் சென்றார்.
இது தொடர்பாக சிவசேகர் பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆராய்ந்த போது, கொள்ளையில் ஈடுபட்டது பிரபல கொள்ளைக்காரி சேலம் மைதிலி என்பதை கண்டுபிடித்தது பாப்பாரப்பட்டி காவல்துறை. வேறு ஒரு வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மைதிலியை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் ஆசிரியர் வீட்டில் கைவரிசை காட்டியது மைதிலி தான் என்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து மைதிலியிடமிருந்து 10 சவரன் தங்க நகைகளை மீட்ட பாப்பாரப்பட்டி காவல்துறை, மைதிலியை பென்னாகரம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டு்ம் வேலூர் சிறையில் அடைத்தனர்.