சேலத்தில் ஒரே தெருவில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது.  இதுவரை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா மதுரை, சேலம், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,542 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், சேலம் மாநகராட்சி 54-வது வார்டுக்கு உட்பட்ட சீரங்கன் தெருவை சேர்ந்த ஒருவர் அண்மையில் மகாராஷ்டிராவிற்கு சென்று வந்துள்ளார். ஆனால் இதுகுறித்து நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தராமல் நோய் தொற்றுடன் ரகசியமாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தொற்றுடன் இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் 4 பேர் உள்பட அப்பகுதியில் 21 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பியுள்ளார்.

நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக பரிசோதனை மேற்கொண்ட போது இதுகுறித்த உண்மை வெளியவந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றை பரப்பியதாக  கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.