சேலத்தில் மனு கொடுக்க வந்த போது இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த மாதம் இறுதியில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் புகைப்படம் எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவரிடம் தபால் பிரிவு இளநிலை உதவியாளர் சந்திரன் (38) உதவி செய்வதாக பேசியுள்ளார். பின்னர் சாதிச்சான்று எடுக்கவும் தான் உதவுவதாக கூறி 2000 பணம் கேட்டுள்ளார். அடுத்தநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்த பெண் தன்னுடன் உல்லாசமாக இருக்க ஏற்காட்டிற்கு வரவேண்டும் என அழைத்து தவறாக பேசியுள்ளார்.

இதுபற்றி அந்த பெண் சேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், நடந்த சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணை முடிந்த நிலையில் தபால் பிரிவு இளநிலை உதவியாளர் சந்திரனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.