தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் சார்பு ஆய்வாளர் பதவியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகியது. அறிவிப்பு வெளியாகி வெகு நாட்களாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தநிலையில் ஜனவரி 11ம் தேதி தேர்வு நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் தீவிரமாக தயாராகி வந்தனர். இந்தநிலையில் தேர்வு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 32 மையங்களிலும் அறிவிக்கப்பட்ட சார்பு பணியாளர் தேர்வு ஜனவரி 11ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 13ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த தேர்வாளர்களுக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பதிலாக டாக்டர் எம்,ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னையில், குறித்த நேரத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

police-sub-inspector-exam-date-change-tnusrb-notification

மற்ற தேர்வாளர்களுக்கு தேர்வு நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்வு மையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஜனவரி 13ம் தேதி தேர்வு நடைபெறும். திடீரென தேர்வு தேதி மாற்றப்பட்டதால் பெரும்பாலானோர் குழம்பிப்போய் உள்ளனர். தேர்வுக்கு பிறகு பொங்கல் விழா வர இருப்பதால் வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்வதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் ஏற்கனவே ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்திருக்கும் நிலையில் தற்போது தேர்வு தேதி பொங்கலை ஒட்டி மாற்றப்பட்டிருப்பதால் அவற்றை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.