மீண்டும் தமிழகத்தில் மோடி.. ஓரே மேடையில் ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி- சேலத்தில் வெயிட்டாக இன்று களம் இறங்கும் பாஜக
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிய நிலையில், இன்று மதியம் சேலத்தில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள், ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இறுதி கட்டத்தை எட்டிய தொகுதி பங்கீடு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து இறுதி கட்ட தேர்தல் பணிகள் அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது, வேட்பாளர்களை அறிவிப்பது என தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்ளிட்ட தமிழகத்தை சேர்த்து 10 தொகுதியும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. விடுதலை சிறுத்தை கட்சிக்கும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் வழங்கியுள்ளது.
பாஜக மேடையில் ராமதாஸ், ஓபிஎஸ்
அதே நேரத்தில் பாஜகவும் தமிழகத்தில் தங்களது கூட்டணியை பலப்படுத்த தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரை பாமக, அமமுக, ஓபிஎஸ், தமாக, புதிய நீதிகட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியன், தேவநாதன் ஆகியோரை இணைத்துக்கொண்டுள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன் தினம் கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை தொடங்கிய மோடி, நேற்று கோவையில் வாகன பேரணியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று மதியம் சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது தங்களது கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், அன்புமணி, ஓபிஎஸ், டிடிவி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களை மேடையேற்றவுள்ளனர்.
இதையும் படியுங்கள்
PMK ALLIANCE : பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்படவுள்ள 10 இடங்கள் என்ன.? உத்தேச பட்டியல் இதோ