48 மணி நேரத்திற்கு மீண்டும் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!
கிழக்கு திசையில் வீசும் காற்றின் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் நிறைவு பெற்றது. அதன்பிறகு குளிர்காலம் தொடங்கியது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரும் பகல் நேரத்தில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. இதனிடையே தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடகா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இரண்டு நாட்களாக மழை பதிவாகி வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. எனினும் கிழக்கு திசையில் வீசும் காற்றின் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மன் கி பாத்தில் ஒலித்த 'அவ்வையார்' பாடல்..! மீண்டும் தமிழை பெருமைபடுத்திய பிரதமர் மோடி..!
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர நிலவரப்படி சாத்தான்குளத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பாம்பனில் 3 சென்டிமீட்டர் மழையும் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.