தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு கீழிருக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலியோ சொட்டு மருந்து வழங்குவதை தொடங்கி வைத்தார். அதே போல அந்தந்த மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த தமிழ்நாட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.

சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் அரசு ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ரயில்நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் என பல இடங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல நடமாடும் சொட்டு மருந்து மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.