சினிமா பாணியில் தரமான சம்பவம்..! தாறுமாறாக சென்ற காரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..! மதுபோதையில் ஓட்டுநர் கைது..!
சேலம் அருகே மது போதையில் காரை வேகமாக ஓட்டிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் காவலர்கள் மடக்கிப் பிடித்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து கொங்கனாபுரம், தாரமங்கலம் வழியாக கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்ற மற்ற வாகனங்களை இடித்து தள்ளி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவாறு காரை அதன் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். துட்டம்பட்டி அருகே வந்தபோது பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது அந்த கார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் காரை துரத்தி சென்றனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தொடர்ந்து மற்ற வாகனங்களை இடித்து தள்ளி 30 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தார். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கும் வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து பொதுமக்களுடன் சேர்ந்து விரட்டிச் சென்று காவலர்கள் காரை மடக்கிப் பிடித்தனர்.
ஓட்டுனரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெண்ணாகரம் அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பது தெரியவந்தது. அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தார். இதையடுத்து அவர் தாரமங்கலம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.