கரூரில் இருந்து சேலம் நோக்கி நேற்று முன்தினம் மதியம் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. பண்டுதகாரன்புதூர் அருகே வந்த போது பேருந்து திடீரென தாறுமாறாக சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து பயணிகள் கூச்சல் போட்டனர். அப்போது பேருந்தின் முன்பக்க இடது புற டயர் கழண்டு சாலையில் தனியாக ஓடியது.

ஆனால் பேருந்து ஒரு பக்க டயர் இல்லாமலேயே சிறிது தூரம் சென்றது. சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக மெதுவாக கொண்டு சென்று நிறுத்தினார். இதையடுத்தே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தனியாக ஓடிய பேருந்து டயர் அங்கிருந்த கூட்டுறவு நியாயவிலை கடையின் சுற்று சுவரை உடைத்தது. பேருந்து தாறுமாறாக சென்றதில் பயணிகள் சிலர் லேசான காயமடைந்தனர்.

பின் உடனடியாக மாற்று பேருந்து ஒன்று வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஓட்டுனரின் துரித செயல்பட்டால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். முறையான பராமரிப்பு இன்றி பேருந்து இயக்கப்பட்டதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக பயணிகள் குற்றம் சாற்றுகின்றனர்.

Also Read: நிறைமாத கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதிய கார்..! தூக்கி வீசப்பட்டு மகனுடன் பலி..!