சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. வயது 26. இவரது மனைவி ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சின்னத்தம்பி, இருசக்கர வாகனங்களுக்கு உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை வைத்து தொழில் பார்த்துவந்துள்ளார்.

இந்த நிலையில் ரேகா அடிக்கடி தொலைபேசியில் முகநூல் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் ஒட்டங்காட்டைச் சேர்ந்த ரகுமான்(23 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் தினமும் அதிக நேரம் தொலைபேசியில் உரையாடி வந்திருக்கிறார். இதை கணவர் சின்னத்தம்பி கண்டித்தும் ரேகா கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனிடையே திடீரென ஒருநாள் ரேகா ரகுமானுடன் சேர்ந்து ஓடி விட்டார். இருவரும் மூன்று மாதங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் ரேகாவிற்கு ரகுமான் மீது வெறுப்பு ஏற்பட்டதால்  இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்திருக்கிறது. இதனால் மீண்டும் தனது கணவர் சின்னத்தம்பியுடன் சேர்ந்து வாழ ரேகா முடிவெடுத்திருக்கிறார். சின்னத்தம்பியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரேகா, தன்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியிருக்கிறார். அவரும் திரும்பி வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து ரேகாவை அவரது கணவரிடம் ஒப்படைக்க ரகுமானும் வந்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் சின்னத்தம்பி காத்திருந்தார். அப்போது ரேகாவுடன் அங்கு வந்த ரகுமானிடம் சின்னத்தம்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரகுமான் கீழே கிடந்த கல்லை எடுத்து சின்னத்தம்பியை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ரகுமானை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ரகுமான் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.