மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியது…. கனமழையால் 5 நாட்களில் நீர்மட்டம் 10 அடி உயர்வு.!
கடந்த வாரத்தில் 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 40,000 கனஅடியாக உயர்ந்தது.
கடந்த வாரத்தில் 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 40,000 கனஅடியாக உயர்ந்தது.
கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், காவிரியின் துணை நதியான பாலாறு, தொப்பையாறு மற்றும் சின்னாறு பகுதிகளில் பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,477 கனஅடியாக இருந்த நிலையில் படிப்படியாக வினாடிக்கு 40,000 கனஅடி வரை தண்ணீர் வரத்து அதிகரித்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு மழை குறைந்ததை அடுத்து அணைக்கு நீர்வரத்து 37,162 கன அடியாக சரிந்தது. கடந்த 22-ஆம் தேதி 95.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் பத்து அடி உயர்ந்து தற்போது 105.14 அடியாக உள்ளது. நேற்று காலை 102.79 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 105.74 அடியாக உயர்ந்ததால் ஒரேநாளில் அணையின் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதாலும் அடுத்த வாரத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.