அணையில் 'தண்ணிய காணோம்'... காயும் பயிர்கள்... கவலையில் விவசாயிகள்..!
தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் சரிந்து விட்டது. இதற்கு மேட்டூர் அணையும் விதிவிலகில்லை.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இதனால் அணைகளின் நீர் மட்டம் சரிந்து விட்டது. இதற்கு மேட்டூர் அணையும் விதிவிலகில்லை.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணையே பூர்த்தி செய்கிறது. மேட்டூர் அணையை பொறுத்தவரை முழுக்க முழுக்க கர்நாடக அணைகளையே நம்பி உள்ளன. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பினால் மட்டுமே காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும். ஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் மட்டுமே டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்த காலகட்டத்தில் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தாமதமாக அணை திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இன்னும் 21 நாட்களே உள்ளதால் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் இந்தாண்டும் 12-ந் தேதி தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதம் 3-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். அந்த சமயம் கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை பெய்து அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணை நிரம்பி அதில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் இந்தாண்டு பருவமழை அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு பிறகு தான் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்த குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 39 கன அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 48 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளதால் அடுத்த மாதம் கடைசி வரை குடிநீருக்கு மட்டும் தான் இந்த தண்ணீர் போதுமானதாகவும், இதனால் குறித்த காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டும் தாமதமாக ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியாகவும், நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. சென்ற ஆண்டு கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. இந்தாண்டும் அதே போல மேட்டூர் அணை நிரம்புமா? என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அணை கட்டியதில் இருந்து தற்போது வரை உள்ள 86 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணையை விவசாயிகளுக்காக திறக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது.