கிருஷ்ணகிரியை சேர்ந்த சிலர் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பழனி போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஒரு வேன் மூலம் சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சேலம்-கோவை பைபாஸ் சாலையில் இருக்கும் சித்தோடு என்கிற பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வேனின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர்.

அப்போது சாலை அருகே இடது பக்கம் இருந்த இரும்பு தடுப்பின் மீது வேன் மோதி நின்றது. இந்த பயங்கர விபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 32) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த சித்தோடு காவலர்கள் காயமடைந்தவர்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த கோவிந்தராஜன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.