தொடங்கியது வாக்குப்பதிவு..! கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..!
உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணியளவில் தொடங்கியது. காலையிலேயே மக்கள் திரண்டு வந்துவாக்களிப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊரக பகுதிகளுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்படுகிறது. சோதனை முன்னோட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் போலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்று தமிழக அரசு பொது விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.