உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 332 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே இன்று சுய ஊரடங்கு அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் மாலை 5 மணி அளவில் மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில் நின்றபடியோ கைகளை தட்டியோ, மணி அடித்தோ கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பிரதமரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் உள்ளனர். கடைகள், உணவகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தான பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் ரயில் சேவை என அனைத்து வகை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் பால் நிறுவனங்கள் ஞாயிற்றுக் கிழமை பால் விநியோகம் செய்ய முடியாது என அறிவித்திருந்த நிலையில் ஆவின் பாலகம் வழக்கம் போல செயல்படுகிறது. அம்மா உணவகமும் இன்று முழுவதும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை மொத்தம் 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். அதன்பிறகே இயல்பு நிலை திரும்பும்.