சேலம் அருகே 13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். 

தமிழகத்தை பொதுத்தவரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போது, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சுமார் 13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானம் 2 லட்சத்துக்கு 5 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் 5 பிட்ச்சுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மைதானத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர்;- சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம் வழங்கியவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா.  சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இணையாக தமிழக விளையாட்டு ஆணையம் உள்ளது.  சேலத்தில் திறக்கப்பட்டு உள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த புதிய மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என கூறினார்.

இதனை தொடர்ந்து, கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பந்துவீச, முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டிங் செய்து விளையாடினார்.