தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. எதிர்பார்த்ததை விட ஒரு நாளைக்கு முன்னதாகவே இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இரண்டு நாட்களாக சேலம் பகுதியில் தொடர்மழை மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலை பகுதியில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகனஓட்டிகள் பகலிலும் முகப்பு விளக்குகளை எரியச் செய்து மெதுவாக செல்கின்றனர்.

கோவை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்கிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் குன்னூர்-உதகை சாலை மற்றும் குன்னூர் - மஞ்சூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே ரயில்சேவையும் இன்றிலிருந்து மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவகம் சென்று திரும்புபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் இருக்கும் பிரதான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் மழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.