சேலம் அருகே இருக்கும் கருப்பூர் கோட்டன்பட்டியைச் சேர்ந்தவர் சேகர்(55). இவரது மனைவி தங்கமணி. மாற்றுத்திறனாளியான சேகர் அங்கிருக்கும் ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சேகருக்கும் அவர் வீட்டின் அருகே இருக்கும் ஒரு குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்திருக்கிறது. இதன்காரணமாக அடிக்கடி இரு குடும்பத்திற்கும் தகராறு நடந்துள்ளது. இருதரப்பில் இருந்தும் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் நேற்று காலை சேகரின் வீட்டிற்கு வந்த காவலர்கள் அவரது மகன் சூர்யாவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். வெகுநேரமாகியும் சூர்யாவை காவலர்கள் விடுவிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சேகர், தனது மனைவியுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைத்த காவல்துறையினரும் பொதுமக்களும் அவர்களை தடுத்து தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனது மகனை உடனே விடுவிக்க  வேண்டும் என்றும் இல்லையெனில் மனைவியுடன் சேர்ந்து தீக்குளிப்பதாக சேகர் தெரிவித்திருக்கிறார். அவர்களை சமாதானம் செய்த காவலர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உயிருக்கு ஆபத்தான பொருள்களை கொண்டு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

மாவட்ட ஆட்சியர் வளாக அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.