இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகங்கள் அனைத்தும் முழுநேரமும் செயல்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதியிலும் அம்மா உணவகங்கள் மூன்று நேரமும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் சேலத்தில் இருக்கும் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட இருப்பதாக மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சேலத்தில் இருக்கும் 11 அம்மா உணவகங்களிலும் மதிய உணவுடன் இலவசமாக முட்டை வழங்கப்பட இருப்பதாக சேலம் ஆணையர் சதீஷ் தெரிவித்திருக்கிறார். இது சேலம் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே மதுரையில் நன்கொடையாக வந்த முட்டைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் பிற மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் நீடிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.