நிரம்பி வழியும் மேட்டூர் அணை.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
மேட்டூர் அணை இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக நிரம்பியதை தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதிகளவிலான நீர் வந்த காரணத்தால் இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது.
அணை நிரம்பிய காரணத்தால் நேற்று மதியம் 16 கண் பாலம் வழியாக உபரி நீர் மீண்டும் திறந்து விடப்பட்டது. அதே வேளையில் கால்வாய் பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 அடியாக குறைக்கப்பட்டது. நேற்று இரவு நிலவரப்படி அணைக்கு 40 000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்ற படும் நீரின் அளவு 37900 கன அடியாக இருக்கிறது.
மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் காரணத்தால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, புகைப்படும் எடுக்கவோ கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைக்க பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.