சேலம் அருகே சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத பெற்றோர் மகளை ஆணவக்கொலை செய்து தூக்கில் சடலத்தை தொங்கவிட்ட பின்னர், தாயும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அருகே உள்ள பூலாவரி ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் ராஜ்குமார் (43). தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சாந்தி (35). ராசிபுரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இவர்களின் மகள் ரம்யா லோஷினி(19), திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து இருந்தார். மகன் தீனதயாளன்(17), 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளான். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தீனதயாளனை அவனது பெற்றோர் இன்று ஒரு நாள் மட்டும் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குமாறு கூறி உள்ளனர். உடனே அவனும் தனது பாட்டி வீட்டுக்கு சென்று தூங்கினான். பின்னர் நேற்று காலையில் அவன் பாட்டி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்தான். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கவே தீனதயாளன் சத்தம் போட்டு அழைத்தும் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவன் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தான். அப்போது தனது பெற்றோரும், அக்காளும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். 

உடனே தீனதயாளனில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தனர். அங்கு ராஜ்குமார் சேலையாலும், சாந்தியும், ரம்யா லோஷினியும் நைலான் கயிற்றாலும் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டு இருந்தனர். இதனையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ராஜ்குமார் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்களிடம் உள்ள நகை மற்றும் வங்கியில் உள்ள பணம் எங்கள் மகனுக்கே சொந்தம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத பெற்றோர் மகளை ஆணவக்கொலை செய்து தூக்கில் சடலத்தை தொங்கவிட்ட பின்னர், தாயும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.