அடுத்த அதிர்ச்சி... பள்ளி மாணவனை தொடர்ந்து ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா?
சேலத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சேலத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஆசிரியைக்குக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்குக் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியைக்குக் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் சேலம் பெரிய கிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.