இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 500 நபர்களுக்கு குறையாமல் புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போது 7,219 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 5,882 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 87 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தற்போது வரை தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட வில்லை. கடந்த 3 மாதங்களாக அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மருந்து இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இரவு, பகல் பாராமல் கண்காணித்து வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகள் மருத்துவர்களின் அறிவுரைப்படி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சேலத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலர் ஆன்லைனில் கோழிக்கறி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. 

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 49 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே சிகிச்சை பெற்று வரும் 4 பேர் சிக்கன் உண்ண ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் கொடுத்து வரவழைத்துள்ளனர். ஆர்டரை கொடுக்க டெலிவரி செய்யும் நபர் வந்துள்ளார். கொரோனா வார்டு பகுதியில் உணவு டெலிவரி செய்கின்ற நபர் வருவது கண்டு அதிர்ச்சியுற்ற மருத்துவமனை நிர்வாகம் விசாரித்துள்ளது. அப்போது தான் கொரோனா சிகிச்சையில் இருந்த 4 பேர் சிக்கன் ஆர்டர் செய்துள்ளதை மருத்துவர்கள் அறிந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நோயாளிகளை எச்சரித்த மருத்துவர்கள் அவர்கள் முறையான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் சிக்கன் ஆர்டர் செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.