ஹரியானாவில் இருந்து  கண்டெய்னர் லாரி ஒன்று சுமார் 6 டன் அளவிற்கு லோடு ஏற்றி சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணியளவில் கந்தம்பட்டி அருகே இருக்கும் மேம்பாலத்தில் லாரி வந்திருக்கிறது. அதிகமான வேகத்தில் வந்த கண்டெய்னர் லாரி மேம்பாலத்தில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதியதாக தெரிகிறது.

இந்த விபத்தால் லாரி அந்த சாலையை முழுவதுமாக தடுத்து நின்றது. இதனால் வாகனங்கள் அந்த பகுதியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சேலம்-கோவை கந்தம்பட்டி நெடுஞ்சாலையில் வாகனங்கள் இருபுறமும் செல்லமுடியாமல் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக அணிவகுத்து நின்றன.

காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த விபத்தால் பெரிதும் பாதிப்படைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்டெய்னர் லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.