இரண்டு நாட்கள் பொது விடுமுறை..! தமிழக அரசு உத்தரவு..!
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களிலும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி வேட்பாளர் பட்டியல் 19ம் தேதி வெளியாகியது. இதில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27 ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. அதனால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு பிறகு வாக்காளர்கள் தவிர பிரச்சாரத்திற்காக வந்திருக்கும் வெளியாட்கள் அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு நாட்களிலும் மக்கள் வாக்களிக்கும் விதமாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களிலும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்கங்கள், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இரு நாட்களில் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.