வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டப்பட இருக்கிறது. அதையடுத்து 27 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி புதுவருடம் பிறக்கவுள்ளது. உள்ளாட்சித்தேர்தலில் வாக்களிக்க ஏதுவாகவும் பண்டிகைகளை கொண்டாடுவதற்காகவும் ஜனவரி 2ம் தேதி வரை தமிழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அளித்து உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

நாளையும் நாளை மறுநாளும் சனி, ஞாயிறு விடுமுறை . அதனுடன் சேர்த்து கூடுதல் விடுமுறை நாட்களாக 23, 24, 26, 31 ஆகிய நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களுக்கான வகுப்புகளை அடுத்து வரும் சனிக்கிழமைகளில் ஈடு செய்துகொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காவே கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிப்பட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. கல்லூரி விடுமுறையால் விடுதிகளில் மாணவர்கள் தங்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் போராட்டங்கள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.