தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். இதற்காக 19 சிறப்பு மருத்து குழுவினர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் தரமான சிகிச்சைக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர், தினந்தோறும் கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். 

தமிழகத்தை பொறுத்தவரை 22 மாவட்டங்கள் ரெட் ஸ்பார்ட்டாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் முதலமைச்சர் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. இதுவரை சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் இருந்து கார் மூலமாக சேலம் வந்துள்ள முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மஞ்சுநாதா, கிரிலோஸ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சேலத்தில் கொரோனா தொற்றால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.