8 வழிச்சாலை அறிவிப்பாணை ரத்து... சங்கடத்தில் எடப்பாடி பழனிச்சாமி..! மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ள இந்த 8 வழிச்சாலைக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை கைவிட கோரி 5 மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் வழக்கறிஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம், வி.பாலு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சுமார் 6 மாதங்களாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். வழக்கு விசாரணையின் போது, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் 8 வழிச்சாலை திட்டத்துக்கான தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுவரை நிலம் கையகப்படுத்தியது செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து விவசாயிகள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மாவட்டமான சேலத்தில் விவசாயிகள், பெண்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஆனால் முதல்வருக்கு இந்த தீர்ப்பு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.