சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவேரிபுரம் கிராமத்தின் அருகில் இருக்கும் பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் வேலுச்சாமி. இவர்கள் அந்த ஊர் மக்களின் சார்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் சாமியார் நித்யானந்தா மீது புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரில் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணையில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலின் மூலவர் லிங்கத்தை சாமியார் நித்யானந்தாவிடம் மீட்டுத் தரவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் இருக்கிறது ஜலகண்டேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேட்டூர் அணை கட்டப்படும் போது இந்த கோவில் அணைப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு பாலவாடி கிராமத்தில் கட்டப்பட்டது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஒரு காணொளியில் பேசி இருந்தார். அப்போது அவர் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் முற்பிறவியில் தன்னால் கட்டப்பட்டது என்றும் அங்கிருக்கும் மூலவர் லிங்க சிலை தற்போது தன்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

எனவே ஜலகண்டேஸ்வரர் கோயில் மூலவர் லிங்கத்தை சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து உடனே மீட்டுத்தர வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த மூலவர் லிங்கம் நித்யானந்தாவிடம் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினர் தலையிட்டு விசாரணை நடத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவர் லிங்கம் தன்னிடம் இருப்பதாக நித்யானந்தா பேசும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.