தமிழகத்தில் கடந்த 2003 ம் ஆண்டு வரை லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கூலி தொழிலாளர்கள் போன்றவர்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் லாட்டரி சீட்டு வாங்குவதிலேயே செலவழிப்பதால் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதாக பெண்கள் அனைவரும் குரல் கொடுத்தனர்.

இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய பெரிய குழுவே செயல்படுவதாக தெரிகிறது. இவர்கள் கூலித்தொழிலாளர்கள், தள்ளு வண்டி வியாபாரிகள், ஓட்டுனர்கள் போன்றவர்களை குறி வைத்து செயல்படுகின்றனர். ஒரு லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்தால் நிறைய பணம் வரும் என்ற ஆசையில் வாங்கி பலர் பணத்தை இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் குற்றம் சாற்றியிருக்கின்றனர். மேலும் சட்டவிரோதமாக நடந்து வரும் இந்த விற்பனை குறித்து காவல்துறைக்கு தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.