அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில்;- வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி, கரூர், சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் 40-42 டிகிரி வெப்பம் அதிகரிக்கும். பொதுமக்கள் காலை 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை யாரும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.

வட மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் மே 31ம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொடநாடு, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.