சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 19 ஆயிரம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா சதத்தை நெருங்கிவிட்டது. கர்நாடகாவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது. 

தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது நபர் உயிரிழந்தார். இந்நிலையில், ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டிருந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பதை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போது மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், 890 பேருக்கு இதுவரை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதில் 757 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். 110 பேருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 5 பேரில் நால்வர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட இவர்கள் ஐவரும் கடந்த 22ம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள். இவர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.