தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில்;- தமிழகம், கேரளா எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், தருமபுரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சூழற்சியால் 20-ம் மற்றும் 21-ம் தேதிகளுக்கு பிறகு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது என புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார்.  

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூர், திருபூண்டி 8 செ.மீ., நாகை, மணிமுத்தாறு, குடவாசல் 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, பாபநாசம் 5 செ.மீ., வேதாரண்யம், காரைக்கால், வலங்கைமான் ஆகிய இடங்களில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவான இடங்களில் புதுச்சேரி (28%) முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் (26%) வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. மதுரையில் 23%, திருவண்ணாமலையில் 21 % சென்னையில் 13 % அளவு குறைவாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பைவிட (16%) பருவமழை குறைந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை 43 செ.மீ. வடகிழக்கு பருமழை பெய்துள்ளது. நாளையுடன் வடகிழக்கு பருவமழை சராசரி அளவான 44 செ,மீ. மழை அளவை எட்டும் என புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார்.