மர்ம காய்ச்சலுக்கு 3 சிறுவர்கள் அடுத்தடுத்து பலி..! பீதியில் பொதுமக்கள்..!
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே இருக்கிறது கத்திரிப்பட்டி மூலக்கொட்டாய் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் நவநீத்(12). அந்த பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் சிறுவன் அவதிப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது நவநீத்திற்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனிடையே சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்து இருக்கும் மாங்காணிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மகன் பரமேஷ்(11). அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக சிறுவன் பரமேஷ் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளான். இதனால் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவனது பெற்றோர் அனுமதித்திருந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதே போன்று சேலம் மாவட்டம் சொர்ணபுரியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பத்பநாபன்(10). அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனை அவனது பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் பத்பநாபன், சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறான்.
டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்கள் சிறுவர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம் சேலம் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய மினிலாரி..! துக்க வீட்டிற்கு சென்ற கணவன்-மனைவி பரிதாப பலி..!