கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(46). நகை வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இவரது நண்பர் வரதராஜ்(41). இருவரும் நகை வாங்குவதற்காக ஒரு காரில் சென்னை சென்றுள்ளனர். காரை ரமேஷ்(36) என்கிற ஓட்டுநர் ஓட்டிச்சென்றுள்ளார். நேற்று சென்னையில் நகை வாங்கிய இருவரும் மீண்டும் அதே காரில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

இன்று அதிகாலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கும் தென்னம்பாளையம் என்கிற இடத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே சென்னையை நோக்கி கொரியர் லாரி ஒன்று வேகமாக சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல நொறுங்கி ஓட்டுநர் ரமேஷ் உடல் நசுங்கி பலியானார். மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

தகவலறிந்து வந்த காவலர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ஓட்டுநர் ரமேஷ், பாலசுப்ரமணியன் மற்றும் வரதராஜ் ஆகிய மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.