வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது வெயில். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில்;- தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், மதுரை, சேலம், கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. 

மேலும், ஆந்திராவை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல், கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.