தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணியளவில் தொடங்கியது. காலையிலேயே மக்கள் திரண்டு வந்துவாக்களிப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. சில கிராமங்களில் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சேலத்தில் 100 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வமுடன் வாக்களிக்க வந்து அனைவரையும் ஆச்சரியபடுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட பூலாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. இவருக்கு தற்போது 100 வயது ஆகின்றது.

நடக்கவே மிகவும் சிரமப்பட்டு வரும்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க காலையிலேயே வந்துள்ளார். தனது உறவினர் ஒருவரின் துணையுடன் நடந்து வந்த அவர், தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார். இதுகுறித்து அவர்கூறும்போது, தனக்கு திருமணம் ஆன முதல் இன்று வரை அனைத்து தேர்தல்களிலும் வாக்களிப்பதாக தெரிவித்தார்.மேலும் அனைத்து இளம் வயது வாக்காளர்களும் வாக்களிக்கவும் வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் கூறியிருக்கிறார்.