கபினி அணையில் 90,000 கனஅடி நீர் திறப்பு... மகிழ்ச்சியில் தமிழக விவசாயிகள்..!
அணையின் பாதுகாப்பு கருதி 90,000 கன அடி தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர், விரைவில் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 90,000 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மற்றும் கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு அதிகரித்துள்ளதால், அணைக்கு வியாழக்கிழமை காலை விநாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி விநாடிக்கு 90,000 கன அடியாக உயர்ந்தது.
இதையடுத்து, அணையிலிருந்து வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 90,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 6 மணி நிலவரப்படி 2282 அடியாக உயர்ந்திருந்தது. கடந்த 1-ம் தேதி 2273 அடியாக இருந்த நீர்மட்டம், கடந்த 8 நாள்களில் மளமளவென உயர்ந்து 2282 அடியை எட்டியுள்ளது. கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 90,000 கன அடி தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர், விரைவில் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.