1 ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்..! முட்டிமோதி குவிந்த மக்கள்..!
சேலம் அருகே கடை ஒன்றில் ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சேலம் மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம். கடந்த 7 வருடங்களுக்கு மேலாக ஹெல்மெட் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகிறார். அவ்வப்போது ஏதவாது அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு விற்பனையை பெருக்குவது அவரது வழக்கமாம். தற்போது ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். வெங்காய விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால் இரண்டையும் இணைத்து ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி ஒரு ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம் என்கிற திட்டத்தை அறிவித்தார். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பலர் போட்டிபோட்டு கொண்டு ஹெல்மெட் வாங்குவதற்காக அவரது கடைக்கு திரண்டனர். ஹெல்மெட் வாங்கியவர்கள் அனைவருக்கும் 1 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறும் போது, வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் இலவசத்தை அறிவித்தபோதும், ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தனது நோக்கமாக இருந்ததாக கூறினார்.
சேலம் நகரில் இரண்டு முக்கிய சாலைகளுக்கு ஹெல்மெட் சாலை என அண்மையில் பெயரிடப்பட்டது. அந்த வழியாக வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை வழிமறித்து அறிவுரை வழங்கி காவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். சேலத்தில் ஹெல்மெட் அணிவது அதிரடியாக பின்பற்றி வரும் நிலையில் அதை கருத்தில் கொண்டு வியாபாரி ஒருவர் அறிவித்திருக்கும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.