தேர்தல் கூட்டணிக்காக புறா, காக்கா, கழுதை என எல்லா தூதையும் அனுப்பியாச்சி - மன்சூர் வேதனை பேச்சு
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 5 இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், கூட்டணிக்காக பிற கட்சிகளுக்கு புறா, காக்கா, கழுதை என அனைத்தையும் தூது அனுப்பி உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். கடந்த கால தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தினத்தன்று வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடிகர் மன்சூர் அலிகானால் துவங்கப்பட்டுள்ள இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தமிழர் திரள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்களும் அவருடைய ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவன தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் சிறப்புரை ஆற்றி பேசுகையில், அரசியல் மாற்றம் அடிப்படை மாற்றம் மற்றும் தமிழர்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் நீண்ட உரையாற்றினார்.
அப்போது, தொடர்ந்து இந்தியாவிலும், தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கோடி கோடியாக கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தமிழக மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். மேலும், வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படும் 'EVM மிஷினை உடைத் தெறிய வேண்டும்', 'மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்' என மத்தியில் ஆளும் பாஜக அரசையும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 5 இடங்களை தேர்வு செய்துள்ளோம். கூட்டணிக்காக புறா, காக்கை, கழுகு என அனைத்தையும் தூது அனுப்பி உள்ளோம். பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது தான் எங்கள் நோக்கம். ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் திரைத்துறை, ஊடகத்துறை, சினிமாத்துறை உள்ளது. எனக்கு 4 கோடி அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.