இலங்கையில் இருந்து இளம்பெண் ஒருவர் காதலனை தேடி சட்டவிரோதமாக படகில் ராமேஸ்வரம் வந்தார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Sri Lankan Young Woman Came To Rameswaram Illegally For Boyfriend: நமது அண்டை நாடான இலங்கையில் இருந்து பிழைப்பு தேடி இலங்கை தமிழர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரின் போது ஏராளமான மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் ஏராளமான மக்கள் பிழைக்க வழியின்றி தமிழ்நாட்டு பக்கம் ஒதுங்கினார்கள். இப்படியாக வாழ்வாதாரத்தை தேடி இலங்கைத் தமிழர்கள் தமிழகம் நாடி வருவதை நாம் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்த இளம்பெண்

ஆனால் இலங்கையில் இருந்து காதலனை தேடி கடல் கடந்து கள்ளப்படகில் ஒரு இளம்பெண் ராமேஸ்வரம் வந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அதாவது நேற்று அதிகாலையில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் இலங்கையில் ஒரு இளம்பெண் அகதியாக வந்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த பெண்னிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பழனி அகதிகள் முகாம்

அப்போது அவர் இலங்கையில் மன்னார் ஆண்டகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த விதுர்ஷியா (25) என்பதும், இலங்கையில் இருந்து தன்னந்தனியாக கடல் கடந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது அவர் காதலனை தேடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விதுர்ஷியா குடும்பம் ஏற்கெனவே இலங்கையில் இருந்து பிழைப்புக்காக தமிழகம் வந்து பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்துள்ளனர்.

இளைஞருடன் மலர்ந்த காதல்

அப்போது பழனி அகதிகள் முகாமில் தாய், தந்தையுடன் இருந்த அவர் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே விதுர்ஷியா கடந்த ஏப்ரல் மாதம் விமானம் மூலம் இலங்கை சென்றார். ஆனால் பின்பு தமிழகம் திரும்ப அவருக்கு விசா கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் காதலனை கரம்பிடிக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். இதனால் சட்டவிரோதமாக கள்ளப்படகு மூலம் தமிழகம் வர முடிவு செய்தார்.

காதலனை தேடி கள்ளப்படகில் வந்தார்

இதற்காக தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனைக்கு ஒரு பிளாஸ்டிக் படகில் ஏறி வந்துள்ளார். அந்த படகை படகோட்டி ஒருவர் ஓட்டி வந்துள்ளார். விதுர்ஷியா தன்னிடம் இருந்த நகையை விற்று ரூ.2 லட்சத்தை படகோட்டியிடம் கொடுத்து ராமேஸ்வரம் வந்துள்ளார். விதுர்ஷியாவை இறக்கி விட்ட பிறகு அந்த படகோட்டி இலங்கை திரும்பிச் சென்றுள்ளார். விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.