இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.
Rameswaram Fishermen Protest Against Sri Lankan Navy: தமிழ்நாட்டின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழடலில் மீன்பிடிக்க செல்கின்றனர். ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
சில நேரங்களில் நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படும்பொதெல்லாம் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், அதற்கு ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கைது
தாங்கள் கைது செய்யப்படுவது குறித்து மீனவர்களே பலகட்டமாக போராட்டம் நடத்தி பார்த்து விட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல்
கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீனவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்களின் உறவினர்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இப்படியாக மீண்டும் மீண்டும் நமது மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் போராட்டம்
இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதாவது மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இந்த விவாகரத்தில் மத்திய, மாநிஅல் அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் வரும் 13ம் தேதி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், 19ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
