1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி ராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் வனப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டம் முழுவதும் வளர்க்கப்பட்டு வருகிறது. பெருநெல்லி, வாகை, மூங்கில், ஆலமரம், அரசமரம், அத்தி, விளாம்பழம், ஆவிமரம், கொடுக்கப்புளி, புங்கன், வன்னி, கொய்யா, பூவரசு போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி, ராமநாதபுரம் மாவட்ட பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத் துறையைச் சேர்ந்த 10 பணியாளர்கள் மற்றும் 5 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.