அமைச்சர் மேடையில் பேசும்போது திடீரென பொங்கி எழுந்த பெண்கள்; எங்க ஊருக்கு என்ன செஞ்சீங்க என கேட்டு ஆவேசம்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 71வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 71வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இருவண்ண கொடியேற்றத்துடன் தொடங்கிய கூட்டத்தில் நிர்வாகிகள் பேசிவிட்டு பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பேச ஆரம்பித்தார். அவர் பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனைக்கண்ட அமைச்சர் மெய்யநாதன் சலசலப்பிற்கான காரணத்தை கேட்டபோது எங்கள் பகுதிக்கு பேருந்து வசதி இல்லை எனவும், இதனால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவும் வேதனையோடு தெரிவித்தனர். இதனைக் கேட்ட அமைச்சர் இன்னும் 2 நாட்களுக்குள் உங்கள் பகுதிக்கு பேருந்து வருவதற்கான வசதியை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார். இதனைக் கேட்ட பெண்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.
அதன் பிறகு தொடர்ந்து பேசிய அமைச்சர் 33 மாத ஆட்சி காலத்தில் நீங்கள் எண்ணி பார்க்காத வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி தந்திருக்கிறார். கடந்த ஆட்சியில் அரசு கஜானாவை காலி செய்து விட்டு சென்று விட்டு 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன். இதற்கு ஆண்டு ஒன்றுக்கு 55 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிலை இருந்தது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொறுப்பேற்ற நமது தமிழக முதலமைச்சர் இந்த தடைகள் எல்லாம் உடைத்தெறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார் என பேசினார். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.